தீபாவளி நாளில் உருவாகும் சிட்ராங் புயல்!! வடகிழக்கு பருவமழை கால முதல் புயல்!!1474594082


தீபாவளி நாளில் உருவாகும் சிட்ராங் புயல்!! வடகிழக்கு பருவமழை கால முதல் புயல்!!


வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயல் தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த புயலுக்கு சிட்ராங் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயல் அக்டோபர் 24 ஆம் தேதி வங்காள விரிகுடாவில் உருவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தலாக புயலோடு ஆரம்பிக்க உள்ளது. அதற்கான அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று பல ஊர்களில் பலத்த மழை பெய்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 20 ஆம் தேதிவாக்கில் உருவாகக்கூடும். இது மேலும் அக்டோபர் 22 ஆம் தேதிவாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

திங்கள்கிழமை முதல் வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதாகவும், அது வலுவடைந்து தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்கக் கடலில் வியாழக்கிழமைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயலாக வலுப்பெற்றவுடன், தாய்லாந்தால் பெயரிடப்பட்ட சிட்ராங் என்று அழைக்கப்படும். மே மாத தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான அசானி புயலுக்குப் பிறகு இந்த ஆண்டு சிட்ராங் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடும் நாளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சிட்ராங் என பெயரிடப்பட்ட இந்த புயல் பெரும்பாலும் மேற்கு நோக்கி நகர்ந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நெருங்கி வட தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவில் உள்ள பகுதிகளை பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கர்நாடகா, கேரளா, மாஹே, தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Comments

Popular posts from this blog